குடிமக்கள் உரிமை??

இன்று காலை நடைப்பயிற்சி முடித்து வரும் போது, எங்கள் வீடு செல்லும் மண் பாதையின் ஆரம்பத்தில், ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அதன் முன்னால் ஒரு பியர் பாட்டில் தரையில். நான்கு குடிமக்கள். நான் அவர்களிடம் அமைதியாக கேட்டுக் கொண்டேன், ” அய்யா, இங்கே குடிக்காதீர்கள்.” 

நான் வீட்டுக்கு போய் விட்டு திரும்பி வந்தேன், நிலைமையை பார்க்க. அவர்கள் இன்னமும் அதே இடத்தில். நான் என் கைபேசியை எடுத்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன், ஆதாரத்திற்காக. குடிமக்களில் ஒருவர் எதுக்கு போட்டோ எடுக்கிற என்று சண்டைக்கு வந்தார். ஆரம்பித்தது யுத்தம். 

“சாலையில், அதுவும் காலையில் குடிக்கிறீர்களே, நியாயமா? இது என் வீட்டுக்கு போகும் சாலை. இங்கே குடிக்கக் கூடாது” என்றேன்.

“இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? நாங்கள் மலைவாழ் மக்கள். நீ வெளி ஊர்க்காரன். நாங்கள் எங்கு வேண்டுமானாலும் குடிப்போம், அதைக் கேற்க நீ யார்? உன்னுடைய நிலமே இல்லாமல் செய்து விடுவோம்” என்று வார்த்தை வளர்ந்தது.

பக்கத்தில் இருந்த தெரிந்தவர்கள் வந்தார்கள், நடு நிலையாக நின்று (!) பேசி அமைதிப் படுத்த முயன்றார்கள். சாலையில் குடிப்பது தவறு என்று ஒருவரும் எனக்கு ஆதரவு கொடுக்கவில்லை. நடு நிலை!!

ஒரு ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விடயத்தை உள்ளூர்க்காரன் வெளியூர்க்காரன் என்று திரித்து சண்டையை வளர்த்த இந்த குடிமக்களை என்ன செய்வது??

Advertisements

நெஞ்சு பொறுக்குதில்லையே. . .

சமீப காலமாக இணைய தள ஊடகங்களில் பரவி வரும், பரப்பப்பட்டு வரும் சில பொய்யான செய்திகளை படிக்கும் போது ஆத்திரம் பொங்குகிறது, அடி வயிறு கலங்குகிறது. அவற்றை அனுப்புபவர்களோ நெருங்கிய நண்பர்கள், நல்ல இதயம் படைத்தவர்கள். எப்படி இவ்வாறான தவறான கருத்துகளை பரப்புகிறார்கள் என்று புரியவில்லை.

ஒரு செய்தி வருகிறது. அது முதலில் உண்மையானதா என்று பார்ப்பதில்லை. அதன் அடிப்படை நோக்கம் என்ன என்பதைப் பார்ப்பதில்லை. பஜனை பாடுவது போல, அந்த செய்தியை அப்படியே அனுப்பி வைக்கிறார்கள். சிந்தனை சக்தி படைத்த எவரும் ஒரு கணமாவது யோசித்தால் புலப்படும் இதில் ஒளிந்திருக்கும் கபட நோக்கம்.

எனக்கு சில காலமாக நாட்டுப் பற்று என்று எவராவது சொன்னால் சிரிப்பு வருகிறது. கேனத்தனமாக இருக்கிறது இவர்களின் நாட்டுப் பற்று. அவர்கள் விதிக்கிறார்கள் இவையெல்லாம் நாட்டுப் பற்று, இவை தேசத் துரோகம் என்று. 

நடுத்தர இந்திய வர்க்கம் ஒட்டு மொத்தமாக ஒரு சுயநல கும்பலாக மாறி வரும் அவலத்தைப் பார்க்கிறேன். அவர்கள் தான் இந்த பொய்யான தேசப்பற்று என்ற வலையில் சிக்கி செய்யும் அக்கிரமங்களை நியாயப் படுத்துகிறார்கள். இதை யாராவது சுட்டிக் காட்டினால், அவரை துரோகி ஆக்கி கழுவில் ஏற்றி விடுவார்கள்.

படித்தும் பதறாய் போய்விட்ட இவர்களை நினைத்தால். . .

தமிழர் பண்பாடு

ஓரு சமுதாயம் முன்னேற, அதன் இளைஞர் கூட்டம் விழித்தெழ வேண்டும். தாய்த் தமிழ்நாடு விழித்துக் கொண்டது போலத் தெரிகிறது.

தமிழரின் வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டை தடை செய்ததை எதிர்த்து இது வரை பல முயற்சிகள் செய்யப்பட்டு ஏதும் பலிக்கவில்லை. பொங்கல் சமயத்தில் கூக்குரல் இருக்கும், பிறகு மறக்கப்படும். பெரும்பாலும் இது ஒரு அரசியல் ஆட்டமாகவே இருந்தது. ஆனால் இம்முறை, பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்று ஆர்ப்பரித்து, இளைஞர் கூட்டம் ஒன்றுகூடி, அமைதியான ஆனால் பிரம்மாண்டமான போராட்டத்தில் குதித்துள்ளது. அருமை, அருமை. இனி நாடு உருப்பட்டுவிடும் என்று ஒரு நம்பிக்கை பிறக்கிறது. வாழ்த்துகிறோம்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பலப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் இவற்றில் முதன்மையானதாகப் பேசப்படுவது தமிழர் பண்பாடு, தமிழ்க் கலாச்சாரம்“. தமிழினத்தில் ஒரு மிகச் சிறிய தொகையே பங்கேற்கும் ஜல்லிக்கட்டே மொத்த பண்பாட்டை பாதிக்கிறது என்றால், மொத்த தமிழினமே ஈடுபடும் சில செயல்கள் எந்த அளவு நம் பண்பாட்டை அழித்துக் கொண்டு வருகின்றன? இதோ ஒரு சிறிய பட்டியல்.

1. உயிரை விட மானமே பெரிதென்று தொட்டிலில் ஆடிய பருவத்திலிருந்து சொல்லி வளர்ந்தவர்கள் தமிழர்கள். அந்த மானம் இல்லாத ஒரு கூட்டம் தானே கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழகத்தை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்டு சூரையாடி வருகிறது? எங்கே போனது தமிழ்ப் பண்பாடு? உலகத்திலேயே முதன்முதலாக மக்களாட்சி தோன்றிய இடங்களில் தமிழகமும் ஒன்று. குடவோலை, ஞாபகம் வருகிறதா? இப்பொழுது நடப்பது என்ன? ஆயிரம் ரூபாய் பிச்சைக் காசிற்கு அந்த உரிமையை விற்பவன் தானே தமிழன்?

2. நம் நாட்டு மாட்டினங்களை காப்பாற்றவே ஜல்லிக்கட்டு என்று ஒரு வாதம். மிகவும் சரியானதே. ஆனால் இது மட்டுமே காரணமா? தமிழனின் பேராசையும் தானே முக்கிய காரணம்? பொதுவாக நாட்டு மாடு 5 லிட்டர் கொடுக்கும். ஜெர்ஸி 20 லிட்டர் கொடுக்கும் என்று பேராசையில் தானே ஐயா நாட்டினங்களை கை விட்டோம்? இயற்கையான கருத்தரிப்பதை விட்டு ( காளை இருந்தாலும்) ஊசியைத் தானே நாடுகிறான் தமிழன்? ஏன்? எங்கே ஐயா, நமது பண்பாட்டுப் பற்று??

3. உறவினர்கள்,நண்பர்கள், அண்டை வீட்டார்கள், பக்கத்து ஊரார் என்று எல்லோரும் சேர்ந்து பேசிக் கலக்க உண்டானவை தான் தமிழர் திருவிழாக்கள் . இப்பொழுது?? காதை செவிடாக்கும் ஒலிபெருக்கிகள் இல்லாமல் ஏதாவது ஒரு கல்யாணம், கருமாதி, காதுகுத்து, கோயில் திருவிழா தமிழகத்தில் உண்டா? அதை விடுங்கள், இவை என்றோ ஒரு நாள் என்று சகித்துக் கொள்ளலாம். ஆனால், பேருந்துப் பயணம்? அந்த நாராசமான சத்தம் இல்லாவிட்டால் இளைஞர்கள் ஏற மாட்டார்கள் என்று தானே பேருந்துகள் இதைப் பொருத்துகிறார்கள்? இதுவா ஐயா நமது தமிழ் கலாசாரம்?

4. ஈவ் டீஸிங்: இதற்கு தமிழில் வார்த்தையே இல்லை. ஏன்? இப்படி ஒரு இழிவான செயல் நம் முன்னோர்க்கு தெரியாது.கேலி பேசுவார்கள்; கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தமாட்டார்கள். ஆனால் இப்போது? இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட, சாதாரணமான ஒரு நடத்தை ஆகி விட்டது. இதுவா நமது பண்பாடு?

5. செய்யும் தொழிலே தெய்வம் என்பது நமது பண்பாடு. ஆனால், எல்லோர்க்கும் உணவளிக்கும் உழவுத் தொழில் கேவலமாகி விட்டது. இளைய தமிழ் சமுதாயமே, கணிணியில் நெல் விளைவிக்க முடியாது. எத்தனை எத்தனை இளைஞர்கள் விவசாயத்தை கைவிட்டு பட்டணம் தேடி ஓடுகிறீர்கள்? இந்தச்செயல் எப்படி ஐயா நமது பண்பாட்டைக் காப்பாற்றும்?

இவற்றை எல்லாம் மாற்ற முடியும் என்று ஒரு நம்பிக்கையை இப்போது உருவாக்கி இருப்பதும் நீங்கள் தான் இளைஞர்களே! எந்த அரசியல் நோக்கமும், கட்சிகள் / அரசுகள் ஆதரவும் இல்லாமல் இப்படி ஒரு உன்னதமான போராட்டம் சாத்தியமே என்று நிரூபித்து காட்டியிருக்கிறீர்கள். தொடருங்கள் ஆக்கபூர்வமான உங்கள் பங்களிப்பை! மாறுவோம், மாற்றுவோம்!!

ஒளிமயமான எதிர்காலம் என் கண்ணில் தெரிகிறது. வாழ்த்துக்கள்!

அனுதாபத்தின் அபத்தம்.

மற்றுமொரு இயற்கைப் பேரழிவு. ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தார்கள் வீடுகள் சேதமடைந்தன. போக்குவரத்து நின்று போனது.துயரமான செய்தி தான். வழக்கம் போல எல்லோரும் நிதி திரட்ட கிளம்பிவிட்டார்கள். இங்கு தான் எனக்கு குழப்பமே. எங்கோ எவரோ படும் துன்பத்திற்கு மனமுருகும் நம் சமுதாயம், தன்னுடன் வாழும், வறுமையால் வாடும்,ஒரு கூட்டத்தை தினம் தினம் பார்க்கிறது. ஆனால் அவர்களை சட்டை செய்வதே இல்லை. அவர்களை ஒரு பொருட்டாகவே உணர்வதில்லை. அவர்களுக்கு ஒரு உதவியும் செய்வதில்லை. எங்கோ நடக்கும் துயரமான சம்பவத்திற்கு, அள்ளிக் கொடுக்கும் நாம், அண்டை வீட்டுக்காரன் சாகக் கிடந்தால் கூட ஏனென்று கேட்பதில்லை. ஏனிந்த முரண்பாடு? கண்முன் இருப்பவர்க்கு இரக்கம் காட்ட முடியவில்லை, எவருக்கோ உருகி உருகி உதவி செய்ய முடிகிறது. என்ன அபத்தமிது?

கிராமத்து இன்பங்கள்

பச்சை பசேலென வயல்வெளிகள். சுத்தமான காற்று. அளப்பரிய அமைதி. “ரிலாக்சான” வாழ்க்கை. ரிடயர் ஆனவுடன் நாங்களும் இப்படித் தான் இருக்கப் போகிறோம். எங்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் பெரும்பாலோர் சொல்லும் சில வார்த்தைகள்.

ஆறு மணிக்கு எழுந்து மாட்டுத் தொழுவத்திற்கு போய் , கோமியம் விடுமா என்று தினமும் காத்திருப்பது , ஒன்பது மணிக்கு வரவேண்டிய வேலையாட்கள் வராமல் போனால், ஆடு மாடுகளை மேய்பிற்கு கூட்டி செல்வது, மாட்டுத் தொழுவத்தை கழுவுவது, வீடு கூட்டி சுத்தம் செய்வது,  டீசல் என்ஜினை அரும்பாடு பட்டு ஸ்டார்ட் செய்து வயலுக்கு பாசனம் செய்வது,  டீசல் இல்லாமல் அது நின்று போகும்போது ஐந்து கிமீ பைக்கில் போய்  டீசல் வாங்கி வருவது, ஓட்டையான பாசன பைப்புகளை சரி செய்வது, செடிகொடிகளுக்கு மருந்து ( ஒரிஜினல் இயற்கை மருந்து! ரசாயன விஷமல்ல) அடிப்பது , நனைந்து போன விறகுடன் மன்றாடி அடுப்பு  பற்ற வைப்பது, விறகு நனையாமல் இருக்க ஏற்பாடு செய்வது, காய் கனிகளை அறுவடை செய்வது, பக்கத்து நிலத்துக்காரரின் ஆடு மாடுகள் நமது இடத்தில் மேயாமல் பார்த்துக் கொள்வது, வீட்டு உபயோகத்துக்கான தண்ணீரை டாங்கில் ஏற்றுவது, தெரியுமோ தெரியாதோ, சகல கலா வல்லவனாக எல்லா ரிபேர் வேலையும் செய்ய வேண்டியது,
– கொஞ்சம் இருங்கள், மூச்சு விட்டுக் கொள்கிறேன் –
மாதம் ஒரு முறை தன்னிஷ்டம் போல் வரும் LPG வண்டிக்காக இரண்டு மூன்று மணி நேரம் காத்திருப்பது, புதராய் மண்டிக் கிடக்கும் இடங்களை சுத்தம் செய்வது, அறுவடை முடிந்த பயிர்களை போரடிப்பது, பின்னர் அவற்றை சுத்தம் செய்து எடுத்து வைப்பது, இருட்டுவதுக்கு முன்னால் திரும்பவும் மாடுகளை கட்டுவது, அவற்றிற்கு தீனி கரைத்து வைப்பது, அடுப்பை சுத்தம் செய்து சாம்பலை எடுத்து வைப்பது, செடிகொடிகளுக்கு தண்ணீர் விடுவது, எலிகளைப் பிடிக்க பொறி வைப்பது, இதனைத்தும் அடங்கியது தான் எங்கள் “ரிலாக்சான” வாழ்க்கை!
ஆனால் எங்களுக்கு கிடைக்கும் போனஸ் எக்கச்சக்கம்! காலையில் துயிலெழுப்ப ஒரு பறவைக் கூட்டம், நாளுக்கு இரு முறை ஓவியம் தீட்டும் கதிரவன் தரிசனம், கண் சிமிட்டி கூப்பிடும் விண்மீன் குழுமம், காதல்மொழி பேசும் வெள்ளை நிலவு, கட்டித் தழுவி கொண்டாடும் காற்று, சுவையான சத்தான உணவு, ஆனந்த தாலாட்டு பாடும் அற்புதமான மௌனம், தினமும் ஒரு புதிய பாடம், பயிற்சி என்று வாழ்க்கையே ஒரு உற்சாகக் கூடம்.

பயணங்கள்

நிமிடங்கள் நகர்ந்தாலும் ,
தூரம் நெருங்கவில்லை.

இலக்கை அடைந்த பின்னும்
ஏக்கம் குறையவில்லை.

வயிறு நிறைந்த பின்னும்
பசியது போகவில்லை.

கதை பல சொல்லி முடித்தும்
கற்பனை தீரவில்லை.

தூக்கம் நீங்கினாலும்
கனவு முடியவில்லை.

கோயிலை கண்ட பின்னும்
கடவுளை காணவில்லை.

கண்கள் வறண்ட போதும்
கலக்கம் விடவில்லை.

எங்கே எங்கே எங்கே ?
என் பயணங்கள் முடியவில்லை. . .

போர்கையின் வானவில்

( this poem/ song was written for Porgai.)

ஊருக்கு அப்பாலே,
ஓடைக்கு தெக்காலே
புதையல் பல பாத்திருக்கோம்
பாதுகாத்து வச்சிருக்கோம்.

தின்ற வாயைப் பாத்தாலே
தெரிந்து போகுமே – அந்த
திகட்டாத நாகப் பழத்தின்
ஊதாவை அணிந்து கொள்ளுங்க.

கரிய ராமர் உடம்பு போல
கண்ணைப் பறிக்குமே – அந்த
பரடிப் பழம் பாருங்க
பரவசமாய் வாங்குங்க.

பத்து வருஷம் போனால் தான்
காய்க்கும் இந்த நீலம்.
பாத்து மட்டும் ரசிச்சுக்கோங்க
அல்லம் பழத்து நிறத்தை.

கலக்கலா ஒரு பழமிருக்கு எங்க காட்டில
கல கலா என்று சொல்வோம் எங்க மொழியில.
சிறு நடு பெரு என்று மூன்று வகையுண்டு- அதிலே
நடு வகையின் பச்சை இப்ப உங்க கையிலே.

தங்கம் போல தகதகக்கும்
கனிகள் உண்டுங்க.
எங்கள் வீரப் பழம் காரப் பழம்
நிறத்தைச் சுவையுங்க.

நகம் பட்டா வெக்கப் படும்
அளிஞ்சி மரத்தின் பழத்தை
நாங்க கொண்டுவந்து கொடுத்திருக்கோம்
ஆரஞ்சு நிறத் துணியாய் .

உடம்பு முழுக்க முள்ளிருக்கும்
உள்ளத்திலே இனிப்பிருக்கும்.
சப்பாத்தி கள்ளிப் பழம்
பிழிந்திருக்கோம் சட்டையிலே

தேடி யெடுத்துக் கொண்டுவந்தோம்
சாமி தந்த சொத்துகளை .
ஆடிப்பாடிக் கொண்டாடுவோம்
தரைக்கு வந்த வானவில்லை.