நைஜீரியா – 1

2008ல் இருந்து நான் பலமுறை பயணம் செய்த நாடுகளில் முதன்மையானது. முதலிரு பயணங்களில் என்னிடம் ஒருவித அலட்சியமும் வெறுப்பும் நிரம்பி இருந்தன. பலப்பல நூற்றாண்டுகளாக மாறாத ஒரு சமுதாயம் என்று ஒரு எள்ளல் ஊடுருவிக் கிடந்த, என்னடா உங்கள் வரலாறு என்று எகத்தாளமாய் பேசிக் கொண்டிருந்த காலம் அது. . . சிறுக சிறுக அது மாறியது. இப்போது ஒரு பரிதாப உணர்ச்சியும், ஆதிக்க வர்க்க நாடுகளின் மீதான கையாலாகாத என் கோபமுமே மிஞ்சி நிற்கிறது.

இந்தியாவைப் போலவே நைஜீரியாவும் ஒரு கூட்டமைப்பு நாடு. வெவ்வேறு இனங்கள், கலாசாரங்கள், தொல்குடி மக்கள், சுற்றுச்சூழல் வேறுபாடுகள்- வளமான தெற்கு, வறண்ட வடக்கு, எல்லாம் சேர்ந்தது தான் நைஜீரியா.

1960கள் வரை மிக வலுவான பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்த நாடு, இன்று? உலகத்தின் ஏழை நாடுகளின் பட்டியலில் 60வது இடத்தில் உள்ளது. . இதன் காரணம் கேட்டால், நம்ப மாட்டீர்கள்! 1956ல் அங்கு பெட்ரோலியம் இருப்பது உறுதிப்பட்டது. விவசாயத்தை நம்பி இருந்த ஒரு சமுதாயம், எண்ணெய் வளையில் விழுந்தது.

எண்ணெய் எடுக்கும் மற்ற நாடுகள் போல பணம் கொழிக்கும் நாடு அல்ல நைஜீரியா. எடுக்கும் எண்ணையை சுத்திகரிக்க ஒரு ஆலை கூட இது வரை இல்லை. கச்சா எண்ணெய் கப்பல்களில் வெளி நாடுகளுக்கு அனுப்பப்படும், அவை சுத்திகரிப்பு செய்து, கூலியாக பாதிக்கு பாதி எண்ணையை எடுத்துக் கொண்டு மீதி பாதியை திரும்ப அனுப்புவார்கள் ! அபத்தமாக இல்லை? ஏனிந்த நிலை? 1960லிருந்து 1980 வரை, இந்த எண்ணை கிணறுகள் பன்னாட்டு நிறுவனங்களின் சொத்தாக இருந்தன. வளம் கொள்ளையடிக்கப் பட்டது. சில நில உரிமையாளர்களும், அரசியல்வாதிகளும் கோடி கோடியாக சம்பாதித்தார்கள். நாட்டை ஓட்டாண்டி ஆக்கினார்கள். விவசாயிகள் எண்ணைக்காக நல்ல விலையில் விவசாய நிலங்களை விற்றார்கள். சில ஆண்டுகள் செல்வச் செழிப்போடு ஆட்டம். பிறகு?? காசும் இல்லை காடும் இல்லை. உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்து வந்த நைஜீரியா, இன்று அவற்றை இறக்குமதி செய்யும் அவலம். இந்த எண்ணை கதை இன்னும் கொடூரமானது. 1980 களில் எண்ணை விலை சரிய தொடங்கிய போது, பன்னாட்டு நிறுவனங்கள் மிக நல்ல மனம் கொண்ட உத்தமர்களாக மாறி, நைஜீரியா அரசாங்கத்திடம் தங்கள் பங்குகளை விற்றார்கள். விலை வீழ்ந்த போது நட்டப் பட்டது அரசு, வேடிக்கை பார்த்தன நிறுவனங்கள். அத்தோடு முடியவில்லை இந்த கயமை. எண்ணை விலை ஏறிய போது, மறுபடியும் தனியார் மயமாக்கப்பட்டது. . .தொடர்கிறது இந்த நயசஞ்சகம். . .

தென் மாநிலங்களில் ” முன்னேற்றம் ” வந்து கொண்டிருப்பதால் மனித நேயம் தேய்ந்து கொண்டிருப்பதை கண் கூடாக பார்க்கலாம். நிலம் வறண்டு கிடந்தாலும் மனம் பசுமையாய் இருக்கும் வட மாநிலங்களில் பயணம் செய்வது இனிய அனுபவம். இங்கே அடுத்தவரின் குசலம் விசாரிக்க நேரம் இருக்கிறது, உதவி செய்யும் பண்பு பரவிக் கிடக்கிறது. இது பெரும்பான்மையான பொதுவான ஒரு நோக்கு தான். தெற்கிலும் நல்ல மனிதர்கள் இல்லாமல் இல்லை. வடக்கில் அனைவரும் உத்தமரும் இல்லை.

கலாசார வரலாறு கண் கலங்க வைக்கிறது. தொல்குடி மக்கள் நிறைந்ததாக இருந்த நைஜீரியா முதலில், பத்தாம் நூற்றாண்டு காலத்தில் வட கிழக்கிலிருந்து வந்த இஸ்லாமிய கொள்கைகளின் ஆதிக்கத்தால் மாறத் தொடங்கியது. வட மாநிலங்களில் இன்றும் பெருமான்மை முஸ்லிம் மதத்தவர் தான். பின், அடிமை வியாபாரம் செய்ய வந்த ஐரோப்பிய நாட்டவர் கிறித்துவத்தை தீவிரமாக பரப்ப , பழைய பழங்குடி நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் மறைய தொடங்கின. இதில் வேடிக்கை என்னவென்றால், இன்றைய நவ நாகரீக நைஜீரியர்கள், பழைய வழிபாட்டு முறைகளை கடைபிடிப்பவர்களை காட்டுமிராண்டிகள் என்று கேலி செய்கிறார்கள். நான் சொன்னேன், “ஐயா, அப்படிப் பார்த்தால் இந்தியாவில் நாங்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் தான்.” வாயடைத்து போய்விட்டது, இவர்கள் அனைவரும் இந்தியாவின் மீது பெருமதிப்பு வைத்திருப்பவர்கள். பழையவை எல்லாம் முட்டாள் தனமல்ல, புதியவை எல்லாம் நல்லதுமல்ல என்று புரிதலுக்கான முயற்சி மிகக் குறைவே காணப்படுகிறது.

—தொடரும்—

2 thoughts on “நைஜீரியா – 1

  1. Your article is an eye opener for all of us. In the last 30 years in India, we moved away from our traditional way of living.

Leave a reply to Seshadri Varadarajan Cancel reply