பாட்டும் கதையும்

(Translated from A Flowering Tree And Other Oral Tales from India by A. K. Ramanujan)

ஒரு நல்ல பாட்டும் ஒரு அருமையான கதையும் தெரிந்த ஒரு குடும்பத்தலைவி இருந்தாள். ஆனால் அவள் யாருக்கும் அந்த கதையை சொன்னதில்லை. எப்பொழுதும் அந்தப் பாடலை பாடியதும் இல்லை.

அவளுக்குள் சிறைப்பட்டிருந்த பாடலும் கதையும் திணறிக்கொண்டிருந்தன. எப்படியாவது வெளியேறி தப்பிவிட விரும்பின. ஒரு நாள் அந்தப் பெண்மணி அசந்து தூங்கிக் கொண்டிருந்த போது அவளது வாய் சற்று திறந்திருந்தது. தருணம் பார்த்து காத்திருந்த கதை வெளியே குதித்து செருப்பாக மாறி வீட்டுக்கு வெளியே அமர்ந்து கொண்டது. பின்னாடியே பாடலும் தப்பித்து ஒரு முழுக்கை சட்டையாக மாறி கொடியில் தொங்கியது.

வெளியே போயிருந்த அந்தப் பெண்ணின் கணவன் வீடு திரும்பிய போது புது செருப்பையும் சட்டையையும் பார்த்து யார் வந்திருக்கிறார்கள்என்று கேட்டான்.

யாரும் வரவில்லையேஎன்று அந்தப் பெண் சொன்னாள்.

அப்படியென்றால் இந்த சட்டையும், செருப்பும் யாருடையதுஎன்று கணவன் கேட்டான்.

எனக்கு எப்படித் தெரியும்?” என்றாள்.

இந்த பதிலால் திருப்தி அடையாத கணவன் சந்தேகப்பட்டான். வார்த்தை முற்றி சண்டையில் முடிந்தது. கோபம் கொந்தளிக்க கணவன் ஒரு போர்வையை எடுத்துக்கொண்டு படுத்துக்கொள்ள அனுமார் கோவிலுக்கு போய்விட்டான்.

மனைவிக்கு ஒன்றுமே புரியவில்லை. தனியாக வீட்டில் இருந்த அவள் இந்த சட்டையும் செருப்பும் யாருடையதாக இருக்கும் என்று தனக்குத் தானே கேட்டு கேட்டு மூளை குழம்பினாள். விளக்கை அணைத்து விட்டு படுத்தாள்.

ஊரில் உள்ள எல்லா விளக்குகளும் அவை அணைக்கப்பட்டவுடன் அவற்றின் சுடர்கள் அனுமார் கோவிலுக்கு வந்து விடிய விடிய வம்பு பேசுவது வழக்கம். அன்று ஒரு சுடர் மட்டும் தாமதமாக வந்தது.

ஏன் இன்று இத்தனை நேரம்?” என்று மற்ற சுடர்கள் எல்லாம் கேட்டன.

எங்கள் வீட்டு தம்பதிகளுக்குள் இரவு முழுக்க ஒரே சண்டைஎன்றது அந்த சுடர்.

எதற்காக?”

கணவன் வீட்டில் இல்லாத போது ஒரு சட்டையும் செருப்பும் வீட்டிற்குள் வந்திருந்தன. அவை யாருடையவை என்று அவன் கேட்டான். அவள் தெரியாது என்றாள். அதற்கு தான் இவ்வளவு சண்டை.”

அந்த சட்டையும் செருப்பும் எங்கிருந்து, எப்படி வந்தன?”

அந்தப் பெண்மணிக்கு ஒரு நல்ல பாட்டும் ஒரு அருமையான கதையும் தெரியும். ஆனால் அவள் இவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தாள். அடைபட்டு மூச்சு திணறிக் கொண்டிருந்த அவை தப்பி வெளியேறி சட்டையும் செருப்புமாய் மாறி அவளைப் பழிவாங்கி விட்டன. அந்தப் பெண்ணிற்கு இது தெரியாது.”

அங்கே தூங்க வந்திருந்த கணவனின் காதில் இந்த விசயம் விழுந்தவுடன் அவன் சந்தேகம் நீங்கியது. விடியற்காலை வீட்டிற்கு போன அவன் மனைவியிடம் பாட்டையும் கதையையும் பற்றி கேட்டான்.

பாட்டா, கதையா, அது என்னஎன்றாள் அவள்.