18வது அட்சக்கோடு

வெகு சில கதைகள் படித்து முடித்த பின்னும் மனதை பிசைந்து கொண்டே இருக்கும். அசோகமித்திரனின் இந்த கதையும் அப்படித் தான்.

உலுக்கி எடுக்கும் சரித்திர நிகழ்வுகள் பற்றி படிக்கும்போது பெரும்பாலும் அது நிகழ காரணமாயிருந்த தலைவரைப் பற்றியோ, அமைப்புகளைப் பற்றியோ தான் நாம் அறிய முடிகிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை அதில் எவ்வாறு இழுத்துச் செல்லப் படுகிறது என்பது தெரிவதில்லை. பாபர் படையெடுப்பில் கிராமங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டன, அவற்றின் வயல்வெளிகள் எப்படி அழிக்கப்பட்டன, அது எத்தனை பேரை எவ்வளவு நாள் பட்டினி கிடக்கச் செய்தது போன்ற தகவல்கள் நமக்கு கிடைக்காது.

18வது அட்சக்கோடு ஐதராபாத் இந்தியாவுடன் இணைய மறுத்த கால கட்டத்தில் நிகழும் ஒரு கதை. ஒரு சாதாரண இளைஞனின் கண்ணோட்டத்தில் நகர்ந்து செல்கிறது. இந்து முஸ்லிம் உறவுகள் எப்படி ஒரு சிறு துளி காலத்தில் முற்றிலுமாக மாறுகின்றன/ மாற்றப்படுகின்றன என்று துல்லியமாக படம் பிடித்து காட்டுகின்றது.

இன்னொரு அதிசயமான ஒரு உண்மையும் நிரூபனமாகிறது: நல்ல கதைகள் எக்காலத்திலும் பொருந்தும் சமூகத்தின் கண்ணாடியாக விளங்குகின்றன. இக்கதையும் அப்படியே. நிஜாமுக்கு பதிலாக இன்றைய அரசை போட்டு படித்தால் மிகவும் பொருத்தமாய் தான் இருக்கிறது. ரஜாக்கர்களுக்கு பதிலாய் RSSன் சேவக்குகளைப் போட்டுப் பார்க்கலாம். சந்திரசேகரனின் விழிப்பு கதையின் கடைசி பத்தியில் நிகழ்கிறது. நமக்கும் அப்படித் தானோ, நம் வாழ்வின் முடிவில் மட்டுமே விழிப்போமோ???

Advertisements

குடிமக்கள் உரிமை??

இன்று காலை நடைப்பயிற்சி முடித்து வரும் போது, எங்கள் வீடு செல்லும் மண் பாதையின் ஆரம்பத்தில், ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அதன் முன்னால் ஒரு பியர் பாட்டில் தரையில். நான்கு குடிமக்கள். நான் அவர்களிடம் அமைதியாக கேட்டுக் கொண்டேன், ” அய்யா, இங்கே குடிக்காதீர்கள்.” 

நான் வீட்டுக்கு போய் விட்டு திரும்பி வந்தேன், நிலைமையை பார்க்க. அவர்கள் இன்னமும் அதே இடத்தில். நான் என் கைபேசியை எடுத்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன், ஆதாரத்திற்காக. குடிமக்களில் ஒருவர் எதுக்கு போட்டோ எடுக்கிற என்று சண்டைக்கு வந்தார். ஆரம்பித்தது யுத்தம். 

“சாலையில், அதுவும் காலையில் குடிக்கிறீர்களே, நியாயமா? இது என் வீட்டுக்கு போகும் சாலை. இங்கே குடிக்கக் கூடாது” என்றேன்.

“இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? நாங்கள் மலைவாழ் மக்கள். நீ வெளி ஊர்க்காரன். நாங்கள் எங்கு வேண்டுமானாலும் குடிப்போம், அதைக் கேற்க நீ யார்? உன்னுடைய நிலமே இல்லாமல் செய்து விடுவோம்” என்று வார்த்தை வளர்ந்தது.

பக்கத்தில் இருந்த தெரிந்தவர்கள் வந்தார்கள், நடு நிலையாக நின்று (!) பேசி அமைதிப் படுத்த முயன்றார்கள். சாலையில் குடிப்பது தவறு என்று ஒருவரும் எனக்கு ஆதரவு கொடுக்கவில்லை. நடு நிலை!!

ஒரு ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விடயத்தை உள்ளூர்க்காரன் வெளியூர்க்காரன் என்று திரித்து சண்டையை வளர்த்த இந்த குடிமக்களை என்ன செய்வது??

அனுதாபத்தின் அபத்தம்.

மற்றுமொரு இயற்கைப் பேரழிவு. ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தார்கள் வீடுகள் சேதமடைந்தன. போக்குவரத்து நின்று போனது.துயரமான செய்தி தான். வழக்கம் போல எல்லோரும் நிதி திரட்ட கிளம்பிவிட்டார்கள். இங்கு தான் எனக்கு குழப்பமே. எங்கோ எவரோ படும் துன்பத்திற்கு மனமுருகும் நம் சமுதாயம், தன்னுடன் வாழும், வறுமையால் வாடும்,ஒரு கூட்டத்தை தினம் தினம் பார்க்கிறது. ஆனால் அவர்களை சட்டை செய்வதே இல்லை. அவர்களை ஒரு பொருட்டாகவே உணர்வதில்லை. அவர்களுக்கு ஒரு உதவியும் செய்வதில்லை. எங்கோ நடக்கும் துயரமான சம்பவத்திற்கு, அள்ளிக் கொடுக்கும் நாம், அண்டை வீட்டுக்காரன் சாகக் கிடந்தால் கூட ஏனென்று கேட்பதில்லை. ஏனிந்த முரண்பாடு? கண்முன் இருப்பவர்க்கு இரக்கம் காட்ட முடியவில்லை, எவருக்கோ உருகி உருகி உதவி செய்ய முடிகிறது. என்ன அபத்தமிது?

நாடுங்கள் நஞ்சில்லா உணவை.

இயற்கை விவசாயத்தில் விளைந்த காய் கனிகள் என்று இப்போது எல்லா ஊர்களிலும் கிடைக்கிறது. ஆரம்ப காலத்தில், இரண்டு பங்கு விலையாக இருந்தது, இப்போது கொஞ்சம் கூடுதலாக விற்கப்படுகிறது. விலை கூடுதலாக ஏன் கொடுக்க வேண்டும், அப்படி என்ன அதில் விசேஷம், எனக்கு என்ன பயன் என்று கேள்விகள் எழுவது இயல்பே.

இரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகளை அள்ளிக் கொட்டி, மண்ணிலுள்ள புழு பூச்சி நுண்ணுயிர்களை படுகொலை செய்து, நிலத்தையும், நிலத்தடி நீரையும் விஷமாக்கி, பேரழிவை நோக்கி நம்மை நடத்திச் செல்கிறது நவீன “அறிவியல்”பூர்வமான விவசாயம். கடவுளாக நினைத்து வழிபட்ட நிலத்தை, வெறும் உற்பத்திக் களனாக பார்க்க வைத்தது இந்த சந்தைப் பொருளாதாரம். சரி அய்யா, எப்படியோ பாடுபடும் உழவர்களுக்கு அதிக வருமானம் வந்தால் போதுமென்று பார்த்தால் , அதுவுமில்லை. சம்பாதிப்பது எல்லாம் உரக் கம்பெனிகளும், உரக்கடைகளும் , கந்து வட்டிக்காரர்களும் தான்.

உழவர் நிலை இப்படியென்றால் நுகர்வாளர் நிலையோ இன்னமும் பரிதாபமானது. காசைக் கொடுத்து நோயை வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பூச்சி புழுக்களே தொட மறுக்கும் நஞ்சாகிப் போன காய் கனிகளை, அவற்றின் பளபளப்பான தோலையும் கொழுகொழு சைஸையும் பார்த்து மயங்கி வாங்குகிறோம். அத்தனை விஷத்தையும் உள்வாங்கும் இந்த உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக நைந்து போகிறது. சர்க்கரை நோயும், இதய நோயும், புற்று நோயுமாய்ப் பெருகி மொத்த சமுதாயத்தின் சுகாதாரம் படு பாதாளத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. மூலைக்கு மூலை பெருகி வரும் மருத்துவ மனைகளே இதற்கு சான்று.

இதைப் பற்றியெல்லாம் நினைக்கக்கூட நேரமில்லை நம்மில் பலருக்கு. இந்த வெறித்தனமான ஓட்டமும் போட்டியும் எதற்காக? கொஞ்சம் நில்லுங்கள், சிந்தியுங்கள், செயல்படுங்கள்.

இயற்கை விவசாயத்தில், எல்லா உயிர்களையும் அரவணைத்து செல்லும் வழிமுறைகள் கடைபிடிக்கப் படுகிறது. நிலத்தின் சத்தை உறிஞ்சாமல், உயிர் உரங்களால் வலுப்படுத்தப் படுகிறது. பூச்சிகள் கொல்லப்படுவதில்லை, விரட்டப்படுகின்றன. காய்கறிகளின் இயல்பான நிறமும் சுவையும், சத்தும் காக்கப்படுகிறது. பலவிதமான பயிர்கள் சுழற்சி முறையில் பயிரிடப்படுவதால், அந்த சுற்றுச் சூழலின் பல்லுயிர் கூட்டமைப்பு (bio-diversity) பாதுகாக்கப் படுகிறது. காற்றும் நீரும் தூய்மை பெறுகின்றன.

நமது குழந்தைகளுக்காக, பேரப்பிள்ளைகளுக்காக ஒரு ஆரோக்கியமான சுற்றுச் சூழலை விட்டுச் செல்வதற்காக சிறிது அதிக விலை கொடுத்தாலும் பரவாயில்லை தானே? ஆகவே நாடுங்கள் நஞ்சில்லா உணவை!

அவசரமாய் ஒரு ஆறுதல் தேவை.

வெகு காலம் கழித்து ஒரு தமிழ் திரைப்படம் பார்த்தோம். பெண்களை வெறுக்கும் கதாநாயகன், மறுமணம் செய்துகொண்ட தந்தையுடன் பதினைந்து ஆண்டுகளாக பேசாமல் இருக்கிறான் – அவருடைய சொகுசான வாழ்கையை மட்டும் அனுபவிக்கிறான்! அவனுக்கு இரண்டு உயிர் தோழர்கள். மூன்று பேரின் நெருக்கத்தை படம் பிடிக்கும் காட்சிகள், ஆஹா, அருமையிலும் அருமை. எல்லா காட்சிகளிலும் eve teasing செய்கிறார்கள், தண்ணி அடிக்கிறார்கள், சிறியவர் பெரியவர் அனைவரையும் வாயில் வந்தபடி திட்டுகிறார்கள். காலை பத்து மணி வரை தூங்குகிறார்கள். ஆனாலும் இவர்கள் மிக மிக நல்லவர்கள்.

கதாநாயகன் உண்மையில் மிக நல்லவன் என்பதை தனிப்பட்ட ஒரு மோப்ப சக்தியால் கண்டு கொள்கிறாள் கதாநாயகி. அமெரிக்காவிலிருந்து இவளைத் தேடி வரும் நண்பனை புறக்கணிக்கிறாள். கதாநாயகன் அவளைக் கேவலமாக நடத்துகிறான். கடைசி சீனில் I love you சொன்னதும், அடித்தாலும் மிதித்தாலும் வாலை ஆட்டிக் கொண்டு வரும் நாயைப் போல, நாயகி அவனைக் கட்டிக் கொள்கிறாள். அவள் சொல்லும் வார்த்தைகளால் மனம் மாறி அப்பாவுடன் பேசப் போக, அவர் கேன்சர் வந்து சாக கிடக்கிறார். இவ்வளவு அட்டூழியம் செய்த ஆசை மகனையும் அவனது ஆருயிர் தோழர்களையும் கண்டு பரவசமடைகிறார் அப்பா.

எங்களுக்குத் தான் தாங்க முடியவில்லை. தமிழ் சினிமாவின் நிலைமையைப் பார்த்து வற்றாத நீரூற்றாய் கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது. ஆறுதல் மொழிக்காக காத்திருக்கிறோம். . .

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர். . .

( translated from the article http://thekambattu.wordpress.com/2013/10/09/how-early-we-corrupt-our-children/)
கோவிந்தராஜின் பத்து வயது மகன் ஸாம், இந்த வருடம் ஜூன் மாதத்திலிருந்து, இங்கிருந்து 40 கிமீ தொலைவிலுள்ள சேராப்பட்டு என்னும் ஊரில், ஹாஸ்டலில் சேர்ந்து படிக்கிறான். கோவிந்தராஜ் ஒரு கிறித்தவர்; அதனால் அந்தப் பள்ளியில் ஸாமுக்கு படிப்பு, துணிமணி, புத்தகங்கள், உணவு எல்லாம் இலவசம். ( இதே பாணியில் செயல்படும் இந்து பள்ளிகளும் ஏராளம். இங்குள்ள மலைவாசிகளெல்லாம் இந்து மதமென்று மூளை சலவை செய்யப்பட்டு வெகு நாளாகிறது.)

சமீபத்தில் ஒரு நாள் கோவிந்தராஜ் எங்கள் வீட்டிற்கு வந்த போது சோணாட்டியிடம் சொன்ன கதை இது:
புதிய மாணவர்கள் தங்களை பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும். இந்த கட்டுரைகள், நன்கொடை அளிக்கும் வெளி நாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நமது ஸாம் ( ஜாதி சான்றிதழ் தேவைப்படும் பொது பெயர் ஷ்யாம் என்று மாறும்! ஏனென்றால், இங்குள்ள கிராம அதிகாரிகள் கிறித்தவ பெயர் கொண்டவர்கள் ஆதிவாசிகள் இல்லை என்று அவர்களாகவே முடிவு செய்துவிட்டார்கள்! இது ஒரு தனி கதை!) தன்னுடைய கட்டுரையில் தன் குடும்பத்தைப் பற்றியும், குடும்பத்தின் நெல் மற்றும் கரும்பு வயல்களைப் பற்றியும் எழுதினான். நியாய விலை கடையில் கொடுக்கும் அரிசியை சாப்பிடாமல் தாங்கள் விளைவித்த அரிசியையே சாப்பிடுவதாக பெருமையுடன் எழுதினான்; தங்களிடமுள்ள ஆடுகள், கோழிகள், மாடுகள் பற்றி எழுதினான். அவனுடைய அப்பாவின் பைக் பற்றியும், இரண்டு மொபைல் போன் பற்றியும் குறிப்பிட்டான் ; தன்னுடைய வீடு ஓலை குடிசை கிடையாது, ஓட்டு வீடு என்று பெருமிதப் பட்டான். நிலத்திலிருந்து வரும் வருட வருமானம் இரண்டு லட்சம் ரூபாய் என்றும் எழுதினான். ஆக மொத்தம் ஒரு நல்ல வழக்கை என்பதை படம் பிடித்துக் காட்டியிருந்தான்.
பள்ளிகூட நிர்வாகிகள் கோவிந்தராஜை கூப்பிட்டு, இந்த கட்டுரையை அப்படியே அனுப்பினால் உதவி தொகை கிடைக்காது என்றும் முழு கட்டணத்தையும் ( ஆண்டுக்கு சுமார் அறுபது ஆயிரம் ரூபாய்) கட்டுமாறும் கூறினர். இவ்வளவு பெரிய தொகையை கட்ட இயலாத கோவிந்தராஜ், அங்கிருந்த பாதிரியாரிடம் செல்ல, அவர் இவருக்கு சிபாரிசு செய்ய, பள்ளிக்கூடம் ஒத்துக் கொண்டது ஒரு நிபந்தனையோடு ; கட்டுரையை மாற்றி எழுத வேண்டும்!
ஸாம் மாற்றி எழுதிய கட்டுரையின் சாராம்சம் :
கடையில் விலை கொடுத்து வாங்க முடியாமல் தங்கள் சொந்த அரிசியை சாப்பிடுகிறார்கள்; இரண்டே இரண்டு மாடுகள், வெறும் மூன்று ஆடுகள், மிகச் சில கோழிகள் உள்ளன ; கான்க்ரீட் வீடு கட்ட முடியாமல் ஓட்டு வீட்டில் வசிக்கிறார்கள்; நிலத்திலிருந்து வரும் வருமானம், செய்கூலி, டிராக்டர் கூலி, எல்லாம் கொடுத்தது போக மாதம் 6000 ரூபாய் தான். இதில் அவர் மற்ற இரண்டு பையன்களையும் படிக்க வைக்க வேண்டும்.பைக்கும் போனும் இந்த கட்டுரையில் குறிப்பிடப் படவில்லை.

இரண்டு கட்டுரைகளுமே உண்மையைத் தான் காட்டுகின்றன; ஆனால் இரண்டாம் முறை எழுதும் போது, அந்த சின்ன பையனின் மனம் எப்படி சிறுமைப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். எனக்கு நெஞ்சு அடைக்கிறது.

அமைதியை தேடி. . .

தனியார் பஸ்ஸில் காது செவிடாகும்படி “பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.” அலறி கொண்டிருந்தது. கால் வைக்க இடமின்றி மூச்சுத்திணறும் மனித கூட்டம். “அய்யா கண்டக்டரே,  அந்தப் பாட்டு சவுண்ட கொஞ்சம் குறைங்களேன். என்று நான் விண்ணப்பித்தேன். வேற்று உலகத்திலிருந்து வந்திருக்கும் ஒரு பிராணியாய் என்னை பார்த்து விட்டு, துளி சத்தத்தை குறைத்தார்.  அவ்வளவு தான், எனக்குப் பின் சீட்டில் இருந்த ஒரு தமிழினத் தொண்டர், “பஸ்ஸில ஏறரதே, பாட்டு கேட்டுகிட்டே போகரதுக்குத் தான். நல்லா சவுண்டா வைப்பா ” என்று கூக்குரலிட்டார். இவரை ஆமோதித்து பஸ்ஸில் இருந்த பாதி தமிழினம் கத்த, வெற்றிப் புன்னகையுடன் கண்டக்டர் மறுபடியும் இரைச்சலை கூட்டினார்.

“A very sound culture” என்பதை நமது மக்கள் தவறாக புரிந்து கொண்டார்களோ என்று தோன்றுகிறது. தமிழ் நாட்டில் எங்கு சென்றாலும் அமைதியை கண்டுபிடிப்பது என்பது இயலாத ஒன்று. கோயில் திருவிழா, கல்யாணம், காது குத்தல், இழவு, அரசியல் கூட்டம், என்று ஏதாவது ஒன்றில் மைக் செட் போடவில்லை என்றால் அது ஒரு மிகப் பெரிய கேவலம் என்றாகிவிட்டது. அலற விடும் பாடல்களோ அதை விட கேவலம்.

இழவு வீட்டில் “ஆடிய ஆட்டம் என்ன ” என்று தொடங்கி “அவள் பறந்து போனாளே ” என்று தொடர்ந்து இது இழவுப் பாட்டா  அல்லது காதல் பாட்டா என்று மண்டையைப் பிய்த்துக்கொள்ள வைப்பார்கள். கோவில் திருவிழாவில் ” கொலைவெறி கொலை  வெறிடா “வும்,  கல்யாணத்தில் மதனியை காமப் பார்வையில் பாடும் பாட்டும் என்று தமிழ் கலாசாரத்தை நிலை நாட்டுகிறார்கள். அரசியல்வாதிகளின் ஆர்ப்பாட்டமோ கேற்கவே வேண்டாம்.

இந்த மைக் செட் கலாச்சாரம் எப்படி வந்தது? தமிழினத்தை காப்பாற்றவே(!) பிறந்த கழகத்தின் அன்பளிப்பு என்றே தோன்றுகிறது. பாடல்களை ஒலிபரப்பி கூட்டத்தை சேர்க்கும் நுட்பத்தை அவர்கள் தான் பெருமளவில் பயன்படுத்தியிருப்பார்கள். பட்டிதோரும் இவர்கள் நடத்திய கூத்து, இப்போது தமிழினத்தை செவிட்டினம் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து விட்டது.

ஐயா  தொழில்நுட்ப வல்லுனர்களே, இதற்கு ஒரு ரிமோட் கண்டுபிடியுங்களேன். அரை கிலோமீட்டர் தூரத்தில் நின்று கொண்டு ரிமோட்டை அழுத்தினால் , அலறுகின்ற ஒலிபெருக்கி புகைந்து கருகிட வேண்டும்! என்னைப்  போல் நிறைய பேர் உங்களை நன்றியுடன் போற்றி புகழ்வார்கள்.