18வது அட்சக்கோடு

வெகு சில கதைகள் படித்து முடித்த பின்னும் மனதை பிசைந்து கொண்டே இருக்கும். அசோகமித்திரனின் இந்த கதையும் அப்படித் தான்.

உலுக்கி எடுக்கும் சரித்திர நிகழ்வுகள் பற்றி படிக்கும்போது பெரும்பாலும் அது நிகழ காரணமாயிருந்த தலைவரைப் பற்றியோ, அமைப்புகளைப் பற்றியோ தான் நாம் அறிய முடிகிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை அதில் எவ்வாறு இழுத்துச் செல்லப் படுகிறது என்பது தெரிவதில்லை. பாபர் படையெடுப்பில் கிராமங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டன, அவற்றின் வயல்வெளிகள் எப்படி அழிக்கப்பட்டன, அது எத்தனை பேரை எவ்வளவு நாள் பட்டினி கிடக்கச் செய்தது போன்ற தகவல்கள் நமக்கு கிடைக்காது.

18வது அட்சக்கோடு ஐதராபாத் இந்தியாவுடன் இணைய மறுத்த கால கட்டத்தில் நிகழும் ஒரு கதை. ஒரு சாதாரண இளைஞனின் கண்ணோட்டத்தில் நகர்ந்து செல்கிறது. இந்து முஸ்லிம் உறவுகள் எப்படி ஒரு சிறு துளி காலத்தில் முற்றிலுமாக மாறுகின்றன/ மாற்றப்படுகின்றன என்று துல்லியமாக படம் பிடித்து காட்டுகின்றது.

இன்னொரு அதிசயமான ஒரு உண்மையும் நிரூபனமாகிறது: நல்ல கதைகள் எக்காலத்திலும் பொருந்தும் சமூகத்தின் கண்ணாடியாக விளங்குகின்றன. இக்கதையும் அப்படியே. நிஜாமுக்கு பதிலாக இன்றைய அரசை போட்டு படித்தால் மிகவும் பொருத்தமாய் தான் இருக்கிறது. ரஜாக்கர்களுக்கு பதிலாய் RSSன் சேவக்குகளைப் போட்டுப் பார்க்கலாம். சந்திரசேகரனின் விழிப்பு கதையின் கடைசி பத்தியில் நிகழ்கிறது. நமக்கும் அப்படித் தானோ, நம் வாழ்வின் முடிவில் மட்டுமே விழிப்போமோ???

குமுறல்

மழை கொட்டித் தீர்த்தது. சாலைகளெல்லாம் ஓடைகளாய் மாறி வாகனங்களெல்லாம் படகுகளாய் மிதந்து கொண்டிருந்தன. சுத்தம் என்பதை சுத்தமாய் மறந்து விட்டிருந்த ஒரு சமுதாயம் சாக்கடை நீர் கலந்த அந்த ஓடைகளை பார்த்து முகம் சுழித்தது. நகராட்சியையும் மாநில அரசையும் திட்டி தீர்த்தது . மறு நாள் காலையில் வீட்டை பெருக்கி சுத்தம் செய்து குப்பையை கொண்டு போய் சாக்கடையில் கொட்டியது. உபதேசமும் விமர்சினமும் செய்ய அடுத்த மழைக்கு காத்திருந்தது.

இன்னுமொரு கூட்டம் பருவம் தவறி பெய்த மழையை நொந்து கொண்டது. மேடை ஏறி மரங்களை காப்பாற்ற முழங்கியது. தண்ணீரால் தான் அடுத்த உலகப் போர் என்று பறை சாற்றியது. ஓய்வெடுக்க பண்ணை இல்லம் சென்றது. ஓசி கரண்டில் இருபத்தி நாலு நேரமும் மோட்டாரை ஒட்டி பாசனம் செய்தது.

மெத்தப் படித்த மேதாவிக் கூட்டம் ஆண்டுக்கொரு முறை வெவ்வேறு நாடுகளில் கூடிப் பேசியது. மாலைப் பொழுதுகளில் ஊரை சுற்றிப் பார்த்து விட்டு, உல்லாச கேளிக்கைகளில் மனமகிழ்ந்தது. இதைச் செய்ய வேண்டும், அதை கட்டாயமாக்க வேண்டும், மக்களின் மனப்போக்கை மாற்ற வேண்டும் என்றெல்லாம் பக்கம் பக்கமாய் அறிக்கை வெளியிட்டது. அடுத்த கூட்டம் எங்கே போடலாம் என்ற முடிவை மட்டும் எல்லோரும் ஒத்துக் கொள்ள கூட்டத்தை முடித்துகொண்டது.

உரக் கம்பெனி, சக்கரைக் கம்பெனி, அக்ரி ஆபிசர் என்று எல்லோராலும் ஏமாற்றப்பட்ட விவசாயி, வாங்கிய கடனை கொடுக்க முடியாமல், பூச்சி மருந்தை முழுங்கி, ஒரு வாரம் தனியார் ஆஸ்பத்திரியில் அவதிப் பட்டு, கூடக் கொஞ்சம் கடனைக் குடும்பச் சொத்தாய் கொடுத்து விட்டு செத்து தொலைந்தான். அவன் பிள்ளைகள் விவசாயம் ஒரு கேவலமான தொழில் என்று முடிவு செய்து பட்டணம் போய் சேர்ந்தார்கள். மீண்டும் முதல் வரிக்கு போங்க!

இளைஞர்களுக்கு ஒரு செய்தி

இளைஞர்களுடன் அதிகம் பணி புரியும் ஆலோசகர் ஒருவரின் பொன்னான வரிகள் இதோ!

“என்ன செய்வது? எங்கே போவது? போரடிக்கிறது.” என்று அலுத்துகொள்ளும் இளைஞர்களே! உங்களுக்கு என் பதில் இது தான். வீட்டுக்கு போங்கள். தரையை கூட்டிப்  பெருக்குங்கள். சமையல் செய்து பழகுங்கள். உங்கள் வாகனங்களை பழுது பாருங்கள். ஏதாவது வேலை  தேடிக் கொள்ளுங்கள். நோய்வாய்ப் பட்டு வருந்தும் உங்கள் உறவினரை, நண்பரை சென்று பார்த்து ஆறுதல் சொல்லுங்கள். உங்கள் பாடங்களை சிரத்தையுடன் படியுங்கள். இதையெல்லாம் முடித்த பிறகும் நேரமிருந்தால் ஒரு புத்தகத்தை எடுத்து வாசியுங்கள். உங்கள் பொழுதுபோக்கு கேளிக்கைகளுக்கு அரசு பொறுப்பல்ல! நீங்கள் இளைப்பாற பெற்றோரைப்  படுத்தாதீர்கள்.
உங்களுக்கு இன்ப வாழ்வு அளிக்க உலகம் கடமைப்படவில்லை. ஆனால் இந்த பூமிக்கு நீங்கள் கடனாளிகள். சண்டையில்லாத, நோய் நொடியில்லாத , ஒருவரையும் தனிமைப்படுத்தாத உன்னத உலகத்தை உருவாக்க, உங்கள் உழைப்பு, உங்கள் திறமை, உங்கள் வாழ்வு அனைத்தையும் அற்பனிக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.

அழுமூஞ்சியாய் இல்லாமல், வயதுவந்த மனிதனாகுங்கள். உங்கள் ஆகாயக் கோட்டையிலிருந்து வெளியே வாருங்கள். தன்மானத்தோடு தலை நிமிர்ந்து பொறுப்புள்ள மனிதனாய் செயல்படுங்கள் . நீங்கள் ஒரு முக்கியமான, மிகவும் தேவைப்படும் மனிதன். யாராவது ஏதாவது எப்பொழுதாவது செய்வார்கள் என்று நேரம் கடத்தாதீர்கள். இன்று இப்பொழுது, நீங்கள் அதை செய்யுங்கள்!