பதில்

மிகுந்த கோலாகலத்துடன் அந்த கடைசி இணைப்பை  முடித்தான் இரவியன். பத்து பதினைந்து தொலைகாட்சி கேமராக்கள் இந்த நிகழ்வை நேரடி ஓளிபரப்ப, பிரபஞ்சத்தின் கோடானு கோடி உயிர்கள் பார்த்துக் கொண்டிருந்தன.

சற்று நிமிர்ந்து நிலவனுக்கு தலையாட்ட, நிலவன் சுவிட்சுக்கு அருகில் சென்று நின்றுகொண்டான். அது என்ன சாதாரண சுவிட்சா? பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர் கோள்களின் கம்ப்யுட்டர்களையும்  ஒன்று கூட்டி ஒரே சூப்பர் கணினியாய், உலகங்களின் மொத்த அறிவுப் பெட்டகமாய் மாற்றக் கூடிய சுவிட்சு.

இரவியன் கோடிக்கணக்கான ரசிகர்களிடம் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு, கை அசைக்க, நிலவன் சுவிட்சை போட்டான். உரத்த ரீங்காரத்துடன், மாபெரும் சக்தி ஒன்றிணைந்தது. மைல் கணக்கில் நீண்டிருந்த இன்டிகேடர் விளக்குகள் சிறிது மங்கலாகி பிறகு பிரகாசித்தன.

நிலவன் சொன்னான், ”     இரவியன், முதல் கேள்வியை கேட்கும் பாக்கியம் உங்களுடையதே.”

இரவியன் ” இது வரை எந்த கணினியாலும் பதிலளிக்க முடியாத ஒரு கேள்வியை கேட்கப் போகிறேன்.”  சொல்லிவிட்டு சூப்பர் கணினியிடம் திரும்பினான்.

” கடவுள் இருக்கிறாரா?”

சற்றும் தயக்கமின்றி, கணினி சொன்னது, ” ஆம், இப்பொழுது முதல் இருக்கிறார்.”

பயந்து நடுங்கிப் போனான் இரவியன். வேகமாக சுவிட்சை அணைக்க முயன்றான்.

மேகமே இல்லாத வானத்திலிருந்து ஒரு மின்னல் கிளம்பி, இரவியனையும் அந்த சுவிட்சையும் எரித்தது.

(Translated from the story, “Answer” by Frederic Brown.)

Advertisements