கிராமத்து இன்பங்கள்

பச்சை பசேலென வயல்வெளிகள். சுத்தமான காற்று. அளப்பரிய அமைதி. “ரிலாக்சான” வாழ்க்கை. ரிடயர் ஆனவுடன் நாங்களும் இப்படித் தான் இருக்கப் போகிறோம். எங்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் பெரும்பாலோர் சொல்லும் சில வார்த்தைகள்.

ஆறு மணிக்கு எழுந்து மாட்டுத் தொழுவத்திற்கு போய் , கோமியம் விடுமா என்று தினமும் காத்திருப்பது , ஒன்பது மணிக்கு வரவேண்டிய வேலையாட்கள் வராமல் போனால், ஆடு மாடுகளை மேய்பிற்கு கூட்டி செல்வது, மாட்டுத் தொழுவத்தை கழுவுவது, வீடு கூட்டி சுத்தம் செய்வது,  டீசல் என்ஜினை அரும்பாடு பட்டு ஸ்டார்ட் செய்து வயலுக்கு பாசனம் செய்வது,  டீசல் இல்லாமல் அது நின்று போகும்போது ஐந்து கிமீ பைக்கில் போய்  டீசல் வாங்கி வருவது, ஓட்டையான பாசன பைப்புகளை சரி செய்வது, செடிகொடிகளுக்கு மருந்து ( ஒரிஜினல் இயற்கை மருந்து! ரசாயன விஷமல்ல) அடிப்பது , நனைந்து போன விறகுடன் மன்றாடி அடுப்பு  பற்ற வைப்பது, விறகு நனையாமல் இருக்க ஏற்பாடு செய்வது, காய் கனிகளை அறுவடை செய்வது, பக்கத்து நிலத்துக்காரரின் ஆடு மாடுகள் நமது இடத்தில் மேயாமல் பார்த்துக் கொள்வது, வீட்டு உபயோகத்துக்கான தண்ணீரை டாங்கில் ஏற்றுவது, தெரியுமோ தெரியாதோ, சகல கலா வல்லவனாக எல்லா ரிபேர் வேலையும் செய்ய வேண்டியது,
– கொஞ்சம் இருங்கள், மூச்சு விட்டுக் கொள்கிறேன் –
மாதம் ஒரு முறை தன்னிஷ்டம் போல் வரும் LPG வண்டிக்காக இரண்டு மூன்று மணி நேரம் காத்திருப்பது, புதராய் மண்டிக் கிடக்கும் இடங்களை சுத்தம் செய்வது, அறுவடை முடிந்த பயிர்களை போரடிப்பது, பின்னர் அவற்றை சுத்தம் செய்து எடுத்து வைப்பது, இருட்டுவதுக்கு முன்னால் திரும்பவும் மாடுகளை கட்டுவது, அவற்றிற்கு தீனி கரைத்து வைப்பது, அடுப்பை சுத்தம் செய்து சாம்பலை எடுத்து வைப்பது, செடிகொடிகளுக்கு தண்ணீர் விடுவது, எலிகளைப் பிடிக்க பொறி வைப்பது, இதனைத்தும் அடங்கியது தான் எங்கள் “ரிலாக்சான” வாழ்க்கை!
ஆனால் எங்களுக்கு கிடைக்கும் போனஸ் எக்கச்சக்கம்! காலையில் துயிலெழுப்ப ஒரு பறவைக் கூட்டம், நாளுக்கு இரு முறை ஓவியம் தீட்டும் கதிரவன் தரிசனம், கண் சிமிட்டி கூப்பிடும் விண்மீன் குழுமம், காதல்மொழி பேசும் வெள்ளை நிலவு, கட்டித் தழுவி கொண்டாடும் காற்று, சுவையான சத்தான உணவு, ஆனந்த தாலாட்டு பாடும் அற்புதமான மௌனம், தினமும் ஒரு புதிய பாடம், பயிற்சி என்று வாழ்க்கையே ஒரு உற்சாகக் கூடம்.

Advertisements

பயணங்கள்

நிமிடங்கள் நகர்ந்தாலும் ,
தூரம் நெருங்கவில்லை.

இலக்கை அடைந்த பின்னும்
ஏக்கம் குறையவில்லை.

வயிறு நிறைந்த பின்னும்
பசியது போகவில்லை.

கதை பல சொல்லி முடித்தும்
கற்பனை தீரவில்லை.

தூக்கம் நீங்கினாலும்
கனவு முடியவில்லை.

கோயிலை கண்ட பின்னும்
கடவுளை காணவில்லை.

கண்கள் வறண்ட போதும்
கலக்கம் விடவில்லை.

எங்கே எங்கே எங்கே ?
என் பயணங்கள் முடியவில்லை. . .

போர்கையின் வானவில்

( this poem/ song was written for Porgai.)

ஊருக்கு அப்பாலே,
ஓடைக்கு தெக்காலே
புதையல் பல பாத்திருக்கோம்
பாதுகாத்து வச்சிருக்கோம்.

தின்ற வாயைப் பாத்தாலே
தெரிந்து போகுமே – அந்த
திகட்டாத நாகப் பழத்தின்
ஊதாவை அணிந்து கொள்ளுங்க.

கரிய ராமர் உடம்பு போல
கண்ணைப் பறிக்குமே – அந்த
பரடிப் பழம் பாருங்க
பரவசமாய் வாங்குங்க.

பத்து வருஷம் போனால் தான்
காய்க்கும் இந்த நீலம்.
பாத்து மட்டும் ரசிச்சுக்கோங்க
அல்லம் பழத்து நிறத்தை.

கலக்கலா ஒரு பழமிருக்கு எங்க காட்டில
கல கலா என்று சொல்வோம் எங்க மொழியில.
சிறு நடு பெரு என்று மூன்று வகையுண்டு- அதிலே
நடு வகையின் பச்சை இப்ப உங்க கையிலே.

தங்கம் போல தகதகக்கும்
கனிகள் உண்டுங்க.
எங்கள் வீரப் பழம் காரப் பழம்
நிறத்தைச் சுவையுங்க.

நகம் பட்டா வெக்கப் படும்
அளிஞ்சி மரத்தின் பழத்தை
நாங்க கொண்டுவந்து கொடுத்திருக்கோம்
ஆரஞ்சு நிறத் துணியாய் .

உடம்பு முழுக்க முள்ளிருக்கும்
உள்ளத்திலே இனிப்பிருக்கும்.
சப்பாத்தி கள்ளிப் பழம்
பிழிந்திருக்கோம் சட்டையிலே

தேடி யெடுத்துக் கொண்டுவந்தோம்
சாமி தந்த சொத்துகளை .
ஆடிப்பாடிக் கொண்டாடுவோம்
தரைக்கு வந்த வானவில்லை.

நிழல்

பிறந்த நாள் முதல்
நீ என்னை விட்டு பிரிந்ததில்லை.
ஆனாலும் உன்னை பற்றி நான் நினைத்ததில்லை.

தவழ்ந்த பொழுதிலும்,
தட்டுத் தடுமாறி நடந்த பொழுதிலும்,
துள்ளி விளையாடிய பள்ளிப் பருவத்திலும்,
இறக்கை முளைத்துப் பறந்த பொழுதிலும்,
காதல் விழிகளில் சிக்கிக் கிடந்த காலங்களிலும் . . .

பொருளைத் தேடித் திரிந்த பொழுதிலும்,
பிள்ளைகள் மழலையில் மகிழ்ந்த பொழுதிலும்,
பதவிகள் பட்டங்கள் சேர்ந்த சமயத்திலும்,
என்னைப் பெற்றவரை நெருப்பில் இட்ட பொழுதிலும் . . .

நீ என்னை தொடர்ந்ததை,
என் ஒவ்வொரு மூச்சையும் தொட்டதை,
கனவிலும் கூட மறைந்து நின்றதை,
ஏதோ , யாருக்கோ, எவருடையதோ,
என்று அலட்சியமாய் நின்றிருந்தேன்.

உன்னைப் புரியும் பொழுதில் தான் தெரிந்து கொண்டேன்,
நானில்லை, எனதில்லை என்று.

நாடுங்கள் நஞ்சில்லா உணவை.

இயற்கை விவசாயத்தில் விளைந்த காய் கனிகள் என்று இப்போது எல்லா ஊர்களிலும் கிடைக்கிறது. ஆரம்ப காலத்தில், இரண்டு பங்கு விலையாக இருந்தது, இப்போது கொஞ்சம் கூடுதலாக விற்கப்படுகிறது. விலை கூடுதலாக ஏன் கொடுக்க வேண்டும், அப்படி என்ன அதில் விசேஷம், எனக்கு என்ன பயன் என்று கேள்விகள் எழுவது இயல்பே.

இரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகளை அள்ளிக் கொட்டி, மண்ணிலுள்ள புழு பூச்சி நுண்ணுயிர்களை படுகொலை செய்து, நிலத்தையும், நிலத்தடி நீரையும் விஷமாக்கி, பேரழிவை நோக்கி நம்மை நடத்திச் செல்கிறது நவீன “அறிவியல்”பூர்வமான விவசாயம். கடவுளாக நினைத்து வழிபட்ட நிலத்தை, வெறும் உற்பத்திக் களனாக பார்க்க வைத்தது இந்த சந்தைப் பொருளாதாரம். சரி அய்யா, எப்படியோ பாடுபடும் உழவர்களுக்கு அதிக வருமானம் வந்தால் போதுமென்று பார்த்தால் , அதுவுமில்லை. சம்பாதிப்பது எல்லாம் உரக் கம்பெனிகளும், உரக்கடைகளும் , கந்து வட்டிக்காரர்களும் தான்.

உழவர் நிலை இப்படியென்றால் நுகர்வாளர் நிலையோ இன்னமும் பரிதாபமானது. காசைக் கொடுத்து நோயை வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பூச்சி புழுக்களே தொட மறுக்கும் நஞ்சாகிப் போன காய் கனிகளை, அவற்றின் பளபளப்பான தோலையும் கொழுகொழு சைஸையும் பார்த்து மயங்கி வாங்குகிறோம். அத்தனை விஷத்தையும் உள்வாங்கும் இந்த உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக நைந்து போகிறது. சர்க்கரை நோயும், இதய நோயும், புற்று நோயுமாய்ப் பெருகி மொத்த சமுதாயத்தின் சுகாதாரம் படு பாதாளத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. மூலைக்கு மூலை பெருகி வரும் மருத்துவ மனைகளே இதற்கு சான்று.

இதைப் பற்றியெல்லாம் நினைக்கக்கூட நேரமில்லை நம்மில் பலருக்கு. இந்த வெறித்தனமான ஓட்டமும் போட்டியும் எதற்காக? கொஞ்சம் நில்லுங்கள், சிந்தியுங்கள், செயல்படுங்கள்.

இயற்கை விவசாயத்தில், எல்லா உயிர்களையும் அரவணைத்து செல்லும் வழிமுறைகள் கடைபிடிக்கப் படுகிறது. நிலத்தின் சத்தை உறிஞ்சாமல், உயிர் உரங்களால் வலுப்படுத்தப் படுகிறது. பூச்சிகள் கொல்லப்படுவதில்லை, விரட்டப்படுகின்றன. காய்கறிகளின் இயல்பான நிறமும் சுவையும், சத்தும் காக்கப்படுகிறது. பலவிதமான பயிர்கள் சுழற்சி முறையில் பயிரிடப்படுவதால், அந்த சுற்றுச் சூழலின் பல்லுயிர் கூட்டமைப்பு (bio-diversity) பாதுகாக்கப் படுகிறது. காற்றும் நீரும் தூய்மை பெறுகின்றன.

நமது குழந்தைகளுக்காக, பேரப்பிள்ளைகளுக்காக ஒரு ஆரோக்கியமான சுற்றுச் சூழலை விட்டுச் செல்வதற்காக சிறிது அதிக விலை கொடுத்தாலும் பரவாயில்லை தானே? ஆகவே நாடுங்கள் நஞ்சில்லா உணவை!

அவசரமாய் ஒரு ஆறுதல் தேவை.

வெகு காலம் கழித்து ஒரு தமிழ் திரைப்படம் பார்த்தோம். பெண்களை வெறுக்கும் கதாநாயகன், மறுமணம் செய்துகொண்ட தந்தையுடன் பதினைந்து ஆண்டுகளாக பேசாமல் இருக்கிறான் – அவருடைய சொகுசான வாழ்கையை மட்டும் அனுபவிக்கிறான்! அவனுக்கு இரண்டு உயிர் தோழர்கள். மூன்று பேரின் நெருக்கத்தை படம் பிடிக்கும் காட்சிகள், ஆஹா, அருமையிலும் அருமை. எல்லா காட்சிகளிலும் eve teasing செய்கிறார்கள், தண்ணி அடிக்கிறார்கள், சிறியவர் பெரியவர் அனைவரையும் வாயில் வந்தபடி திட்டுகிறார்கள். காலை பத்து மணி வரை தூங்குகிறார்கள். ஆனாலும் இவர்கள் மிக மிக நல்லவர்கள்.

கதாநாயகன் உண்மையில் மிக நல்லவன் என்பதை தனிப்பட்ட ஒரு மோப்ப சக்தியால் கண்டு கொள்கிறாள் கதாநாயகி. அமெரிக்காவிலிருந்து இவளைத் தேடி வரும் நண்பனை புறக்கணிக்கிறாள். கதாநாயகன் அவளைக் கேவலமாக நடத்துகிறான். கடைசி சீனில் I love you சொன்னதும், அடித்தாலும் மிதித்தாலும் வாலை ஆட்டிக் கொண்டு வரும் நாயைப் போல, நாயகி அவனைக் கட்டிக் கொள்கிறாள். அவள் சொல்லும் வார்த்தைகளால் மனம் மாறி அப்பாவுடன் பேசப் போக, அவர் கேன்சர் வந்து சாக கிடக்கிறார். இவ்வளவு அட்டூழியம் செய்த ஆசை மகனையும் அவனது ஆருயிர் தோழர்களையும் கண்டு பரவசமடைகிறார் அப்பா.

எங்களுக்குத் தான் தாங்க முடியவில்லை. தமிழ் சினிமாவின் நிலைமையைப் பார்த்து வற்றாத நீரூற்றாய் கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது. ஆறுதல் மொழிக்காக காத்திருக்கிறோம். . .

குமுறல்

மழை கொட்டித் தீர்த்தது. சாலைகளெல்லாம் ஓடைகளாய் மாறி வாகனங்களெல்லாம் படகுகளாய் மிதந்து கொண்டிருந்தன. சுத்தம் என்பதை சுத்தமாய் மறந்து விட்டிருந்த ஒரு சமுதாயம் சாக்கடை நீர் கலந்த அந்த ஓடைகளை பார்த்து முகம் சுழித்தது. நகராட்சியையும் மாநில அரசையும் திட்டி தீர்த்தது . மறு நாள் காலையில் வீட்டை பெருக்கி சுத்தம் செய்து குப்பையை கொண்டு போய் சாக்கடையில் கொட்டியது. உபதேசமும் விமர்சினமும் செய்ய அடுத்த மழைக்கு காத்திருந்தது.

இன்னுமொரு கூட்டம் பருவம் தவறி பெய்த மழையை நொந்து கொண்டது. மேடை ஏறி மரங்களை காப்பாற்ற முழங்கியது. தண்ணீரால் தான் அடுத்த உலகப் போர் என்று பறை சாற்றியது. ஓய்வெடுக்க பண்ணை இல்லம் சென்றது. ஓசி கரண்டில் இருபத்தி நாலு நேரமும் மோட்டாரை ஒட்டி பாசனம் செய்தது.

மெத்தப் படித்த மேதாவிக் கூட்டம் ஆண்டுக்கொரு முறை வெவ்வேறு நாடுகளில் கூடிப் பேசியது. மாலைப் பொழுதுகளில் ஊரை சுற்றிப் பார்த்து விட்டு, உல்லாச கேளிக்கைகளில் மனமகிழ்ந்தது. இதைச் செய்ய வேண்டும், அதை கட்டாயமாக்க வேண்டும், மக்களின் மனப்போக்கை மாற்ற வேண்டும் என்றெல்லாம் பக்கம் பக்கமாய் அறிக்கை வெளியிட்டது. அடுத்த கூட்டம் எங்கே போடலாம் என்ற முடிவை மட்டும் எல்லோரும் ஒத்துக் கொள்ள கூட்டத்தை முடித்துகொண்டது.

உரக் கம்பெனி, சக்கரைக் கம்பெனி, அக்ரி ஆபிசர் என்று எல்லோராலும் ஏமாற்றப்பட்ட விவசாயி, வாங்கிய கடனை கொடுக்க முடியாமல், பூச்சி மருந்தை முழுங்கி, ஒரு வாரம் தனியார் ஆஸ்பத்திரியில் அவதிப் பட்டு, கூடக் கொஞ்சம் கடனைக் குடும்பச் சொத்தாய் கொடுத்து விட்டு செத்து தொலைந்தான். அவன் பிள்ளைகள் விவசாயம் ஒரு கேவலமான தொழில் என்று முடிவு செய்து பட்டணம் போய் சேர்ந்தார்கள். மீண்டும் முதல் வரிக்கு போங்க!